Search This Blog

Wednesday, June 13, 2012

இந்திய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பது எப்படி?: போட்டியிட தகுதி என்ன?


உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை பெற்றது நமது இந்தியா. இதன் முதல் குடிமகன் ஜனாதிபதி. ஒரு சாதாரண குடிமகனும் ஜனாதிபதி ஆக முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. பதவி காலம் 5 ஆண்டுகள். ஆனால் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒருவரை தேர்ந்து எடுக்கலாம்.
பெருமைமிக்க இந்திய ஜனாதிபதி பதவிக்கு வர இந்திய நாட்டில் பிறந்த எல்லோருக்கும் உரிமை உண்டு. 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி நமது நாட்டின் முதல் ஜனாதிபதி ஆனவர் ராஜேந்திரபிரசாத். அடுத்து வந்த டாக்டர் ராதாகிருஷ்ணனை தொடர்ந்து ஜனாதிபதியாக பலர் பதவி ஏற்றனர்.
இந்திய ஜனாதிபதி பதவிக்கு பெருமை சேர்ந்தவர்களில் அப்துல்கலாமை அடுத்து ஜனாதிபதி ஆனவர் பிரதீபா பாட்டீல். இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமை இவருக்கு உண்டு. இவரது 5 ஆண்டு பதவிகாலம் ஜூலை 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் அரசியல் கட்சிகள் இறங்கி உள்ளன. அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பது எப்படி என்பதை பார்ப்போம்...  
பெருமைமிக்க ஜனாதிபதி பதவிக்கு யாரும் வரலாம்... என்றாலும் அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் அதுபற்றி கனவுகூட காண முடியாது. இந்த பதவிக்கு போட்டியிட சில தகுதிகள் வேண்டும் என்று நமது அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது.
அதன்படி, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 35 வயது நிரம்பி இருக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளவராக இருக்க வேண்டும் ரூ.15 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும் என்பது முக்கிய விதி முறைகளாகும். இந்த தகுதி உடைய ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றால், அவருக்கு 50 எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிந்து கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. ஒரு வேட்பாளருக்குத்தான் முன்மொழிய முடியும்.
புதிய ஜனாதிபதிக்கான வேட்பு மனு வருகிற 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது. மனுக்கள் பரிசீலனை ஜூலை 2-ந்தேதியும், வாபஸ் பெறும் நாள் 4-ந்தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இருந்தால் 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கும். ஓட்டு எண்ணிக்கை தேதி ஜூலை 22. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் போடும் ஓட்டுகளில் அதிக ஓட்டு பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார்.
எம்.பி., எம்எ.ல்.ஏ.க்களின் ஓட்டுக்களுக்கு தனித்தனி மதிப்பீடு உள்ளது. தமிழ்நாட்டில் 1971-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 4 கோடியே 11 லட்சத்து 99 ஆயிரத்து 168. இதை 234 சட்டசபை தொகுதி எண்ணிக்கையால் வகுத்து வரும் விடையை ஆயிரத்தால் வகுத்தால் கிடைப்பது 176. எனவே தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டின் மதிப்பு 176. இதுபோல புதுச்சேரியில் 1971-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 4 லட்சத்து 71 ஆயிரத்து 707. இங்கு எம்.எல்.ஏ. தொகுதி 30. இதன்படி கணக்கிட்டால் ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டு மதிப்பு 16. இதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு மாறும். பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டின் மதிப்பு அதிகமாக இருக்கும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 4,120. இவர்களின் மொத்த ஓட்டுகளின் மதிப்பு 5,49,474.
இதுபோல் எம்.பி.க்களின் ஓட்டுக்களுக்கும் தனிமதிப்பு உள்ளது. பாராளுமன்றத்தில் 543 எம்.பி.க்களும் டெல்லி மேல்சபையில் 233 எம்.பி.க்களும் உள்ளனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 776. இதைக் கொண்டு எம்.எல்.க்களின் மொத்த ஓட்டுக்களை வகுத்தால் கிடைக்கும் எண் 708. இதுவே ஒரு எம்.பி. ஓட்டின் மதிப்பு ஆகும்.
எம்.பி.க்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்களின் மொத்த ஓட்டு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882. இதில் யார் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுக்களைப் பெறுகிறாரோ அவர் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார். எம்.பி.க்கள் டெல்லி பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நாளில் ஓட்டுப் போட வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் மாநில தலைமை செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்வாவடிகளில் ஓட்டுப் போடவேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் எம்.பி.க்கள் 10 நாட்களுக்கு முன்பு முன் அனுமதி பெற்று மாநில தலைநகரங்களில் ஓட்டுப் போடலாம்.
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போடும் போது 2 வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போடலாம். இதில் ஒருவருக்கு முதல் ஓட்டும், மற்றொருவருக்கு 2-வது ஓட்டும் போட வேண்டும். ஓட்டுச் சீட்டு முறையில் இது நடைபெறும். அதிக ஓட்டுக்கள் பெறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். முதல் சுற்றில் 50 சதவீதத்துக்கு மேல் ஒரு வேட்பாளர் வாக்கு பெறாவிட்டால் 2-வது சுற்று ஓட்டுக்கள் எண்ணப்படும். முடிவில் அதிக ஓட்டுக்கள் பெறுபவர் ஜனாதிபதி ஆவார்.
மத்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் ஜனாதிபதி தேர்தலுக்கான முறையான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். அதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரியாக டெல்லி மேல்-சபை செயலாளர் அக்னி கோத்ரி நியமிக்கபட்டுள்ளார். தமிழ் நாட்டில் சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் உதவி தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவின்குமார் மேற்பார்வையில் தமிழ்நாட்டில் ஓட்டுப்பதிவு நடைபெறும். புதுச்சேரியில் சட்டமன்ற செயலாளர் அன்பழகன் உதவி தேர்தல் அதிகாரியாக இருப்பார். இதுபோல் மற்ற மாநிலங்களிலும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. என்றாலும், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறியே நீடிக்கிறது. அடுத்த ஜனாதிபதி கீரிடம் யாருக்கு என்பதை நாடே... ஏன் உலகமே ஆவலோடு எதிர்பார்க்கிறது.
முப்படைத் தளபதி இந்திய ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைப்படியே செயல்பட முடியும். என்றாலும் அவருக்கு ஏராளமான அதிகாரங்கள் உள்ளன. ஜனாதிபதி இந்திய அரசின் தலைவர் என்று அழைக்கப்படுகிறார். மத்திய கூட்டாட்சி நிர்வாக குழுவின் தலைவரான இவர் இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் இருக்கிறார்.  
* இந்திய பாராளு மன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்கும்படி அழைக்கும் உரிமை.
* அவரை பிரதமராக நியமித்தல்.
* பிரதமரின் பரிந்துரையின்படி மத்திய மந்திரிகளை நியமித்தல்.
* நாட்டை மந்திரி சபை மூலம் நிர்வகித்தல்.
* பாராளுமன்றத்தை கூட்டுவது, தள்ளி வைப்பது, பாராளுமன்றத்தில் உரையாற்றுவது.
* பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களில் கையெழுத்திட்டு சட்ட அங்கீகாரம் வழங்குதல்.
* மாநில கவர்னர், ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர், இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் ஆகியோருக்கு பிரதமரின் அறிவுறுத்தலின்படி பதவி பிரமாணம் செய்து வைப்பது.
* நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய 352-வது சட்டப்பிரிவை பயன்படுத்துவது.
*பாராளுமன்றத்தை கலைப்பது. தேர்தல் நடத்துவது அவசர ஆணை பிறப்பிப்பது.
* 356-வது சட்டப் பிரிவுகளின்படி மாநில அரசுகளை கலைக்கும் அதிகாரம்.
* சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை குறைக்கும் சிறப்பு அதிகாரம்...
என்று ஜனாதிபதியிடம் இந்திய ஆட்சி முறையின் முக்கிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன


1 comment:

  1. சரியான நேரத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete