நாணயம் சேர்ப்பவர்களின் கவனத்திற்கு:
ரோமனிய சிப்பாய்கள் விலைமாதர்களிடம் அவர்களது சேவைக்குப் பதிலாக வழங்கியதாகக் கருதப்படும் அடையாள நாணயமொன்று லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு லண்டனின் புட்னி பாலத்திற்கருகிலேயே ரெகிஸ் கேர்சன் என்பவர் இதனைக் கண்டுபிடித்துள்ளார்.
செப்பினால் உருவாக்கப்பட்டுள்ள இந்நாணயமானது ரோமனிய படைச் சிப்பாய்கள் தங்களது பாலியல் தேவைகளுக்காக விலைமாதர்களிடம் சென்ற சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருக்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 2000 வருடங்கள் பழைமையான இந்நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஆணும் பெண்ணும் உறவுகொள்வது போலவும், மற்றைய பக்கத்தில் 'XIIII' எனவும் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆய்வாளர்களின் கருத்துப்படி இவ் அடையாள நாணயமானது 14 சிறிய ரோமானிய நாணயங்களுக்குச் சமமானதெனவும், இது அக்காலப்பகுதியில் வழங்கப்பட்ட ஊழியர் ஒருவரின் ஒரு நாள் சம்பளத்திற்கு சமனானதாகும். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் அக்காலப்பகுதியில் பெண்கள் பாலியல் அடிமைகளாக உபயோகப்படுத்தப்பட்டனர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் விபசாரத்தொழிலுக்கு ரோமானியர்கள் முக்கியத்துவம் அளித்ததாகவும், அப்பேரரசின் பொருளாதாரத்தில் இது முக்கிய பங்கு வகித்ததாகவும் இதனாலேயே அக்காலப்பகுதியில் அதிகாரிகள் விலைமாதர்களைப்ச் பதிவு செய்யும் நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
லண்டனில் இத்தகைய நாணயமொன்று கண்டுபிடிக்கப்பட்டமை இதுவே முதன்முறையாகும். இது தற்போது லண்டன் நூதனசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மூன்று மாதகாலத்திற்கு இது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. (வீரகேசரி)
(புதிய செய்தியாகவும், மரபுச்செய்தியாகவும் உள்ளதால் பிரசுரித்து இருக்கிறேன்)
No comments:
Post a Comment