Search This Blog

Friday, July 23, 2010

தமிழ் மரபு அறக்கட்டளை

தமிழ் மரபு அறக்கட்டளை புதிதாக நான்கு வலைப்பூக்களை மலர விட்டுள்ளது. நாள் கிழமை என்று காத்திராமல் வேலை முடிந்தவுடன் இப்பூக்கள் மலர்ந்துள்ளன. வலைப்பதிவு தொழில் நுட்பம் எளிதானது மட்டுமல்ல, காலத்தை வென்று நிற்கும் திறனுடையதுமாகும். வலைப்பூவின் சிறப்புக்கள்:

1. இணையப் பதிவு (web publishing) என்பது முன்னெப்போதுமில்லாத அளவு எளிமையாகியுள்ளது,
2. வலைப்பூவில் உரையாட முடிகிறது (பின்னூட்டம் மூலமும் நேரடி real time conversation மூலமும்),
3. வலைப்பூ இணையத்தின் பல்லூடகத் திறனை முழுமையாகப் பயன்படுத்துகிறது (multimedia capability),
4. மின் மடல் செய்வதை விடவும் கூடுதல் அனுகூலங்களை வலைப்பூ அளிக்கிறது (உதாரணமாக, embed செய்து ஒளிக்காட்சியை ஓட்டமுடிகிறது).
5. மேலும் சேகரம் செய்யும் திட்டங்களுக்கு (digital archiving schemes) ஏற்ற வகையில் கிட்டங்கியை (database) சுலபமாகத் தேடமுடிகிறது.
6. மடலாடற்குழுவின் சௌகர்யங்களுடன், வலைப் பக்க அனுகூலங்களையும் கூட்டிச் செயல்படுவது வலைப்பூ.
இவைகளை மனத்தில் கொண்டு கீழ்க்காணும் நான்கு வலைப்பூக்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அவற்றைச் சொல்லும் போது அதில் எப்படி எளிதாகப் பங்கேற்கலாம் என்றும் விளக்குகிறேன்:

I. மரபுச் சேதி: (Heritage News)

தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள் மற்றும் தமிழ்க் கலாச்சாரம் பற்றிய தகவல்கள் இங்கு வெளிவரும். இதைத் திறமையாக செயல்படுத்த ஆர்வமுள்ள தமிழர்கள் சேதிக் குறிப்புகளை அனுப்புவதுடன், அவை இணையத்தில் எங்கேனும் வெளியாகியிருந்தால் அதன் தொடுப்பைக் (web link) கொடுத்து உதவலாம். ஒரு செய்திப் பத்திரிக்கை போல் இதை நடத்தும் உத்தேசமில்லை. அதற்கான ஆள்/பொருளாதார பலமில்லை. ஆயினும் ஆர்வமுள்ளவர்கள் அறிந்து கொள்ளும் அளவிளேனும் செய்திகளைத் தரமுடியும். தொடுப்பு பற்றிய மூலாதாரத் தகவலுடன், தொடுப்பு கொடுத்தவருக்கும் நன்றி அறிவிக்கப்படும். (இதனாலேயே என்னை ஒரு 'மரபு அணில்' என்று சொல்லிக் கொள்கிறேன். சேது பந்தனம் செய்த போது அணிலும் பங்கேற்றது. அதன் பங்கேற்பு சிறிதாயினும், பங்களித்துள்ளது என்பது காலத்தில் பதிவாகியுள்ளது!).

II. மரபின் குரல்: Heritage Tunes

முதுசொம் இசையரங்கம் என்றொரு வலைப்பக்கம் இயங்கி வருகிறது. அதை இன்னும் ஊடாட (interactive) வைக்கும் நோக்கமே இவ்வலைப்பதிவு.

1. உங்கள் வட்டார வழக்கு, பேச்சு இவைகளை இத்தளத்தில் நேரடியாகப் பதிவு செய்யலாம். VoiceSnap குழுவுடன் இணைந்து இதைச் செய்துள்ளோம்.
2. மழலைப் பாடல்களை பெரியோரோ, சிறுவர்களோ பாடிப் பதிவு செய்யலாம்,
3. இசைத் துக்கடா (music sample) வை இங்கு அனுப்பலாம்,
4. இலக்கிய உரைகளை அனுப்பலாம்,
5. உங்கள் கவிதை, உங்கள் கதை, உங்கள் நாவல் இவைகளை உங்கள் குரலில் 'காலத்தின் பதிவாக' இங்கு நிரந்தரப்படுத்தலாம்.
6. தமிழின் அமுதம் போன்ற இசை இங்கு பிரவாகம் எடுக்கும் படி செய்யலாம். தமிழ் இசை என்பது பரந்த நோக்கில் 'திராவிட இசை' என்றே இங்கு பதிவாகிறது. எனவே தெலுங்கு, கன்னட, மலையாள, தமிழ் இசைப் பாரம்பரியம் இங்கு பதிவாகிறது. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
7. தமிழ் கிராமப்புற இசை பற்றிய பதிவுகள் அரிதாகவே உள்ளன. அவைகளை இங்கு சேகரம் செய்யலாம்.

III. மரபுச் சுவடு: Image Heritage

படங்கள்! ஆகா! அவை சொல்லும் சேதிகள்தான் எத்தனை. அது கல்யாணக் காட்சியாக இருக்கலாம், குழந்தை பிறப்பாக இருக்கலாம், ஊர் தேர் திருவிழாவாக இருக்கலாம். பழைய படங்கள். தமிழக வீடுகள், தமிழக தெரு அமைப்பு, தமிழகக் கோயில்கள், சிற்பங்கள்...அம்மம்மா! எத்தனை உள்ளன. அப்புகைப்படங்களை இங்கு தொடுப்பது நோக்கம். வேறொரு தளத்தில் அது இருந்தால், ஒரு தொடுப்பின் மூலம் அவைகளைக் கோர்த்துவிட முடியும். மிக, மிக எளிய வழியில் நம் சுவடுகளை இங்கு பதிக்கலாம். புற உலகில் (வெளிநாட்டில்) தமிழ்க் கல்வி பயில்பவர்களுக்கு இம்மாதிரிப் புகைப்படங்கள் ஒரு பொக்கிஷம். ஒவ்வொரு தம்ழ் இணைய மாநாட்டிலும் இதன் தேவை வலியுறுத்தப்படுகிறது.

IV. தமிழ் நிகழ் கலை: Waiting Room (video show)

ஒட்டவைக்கும் (embed) திறன் கொண்டு YouTube, GoogleVideo மற்றும் பிற கிட்டங்களில் கிடக்கும் தமிழ் நிகழ் பற்றிய ஆவணங்களை மிக எளிதாக இங்கு சேர்த்துவிடலாம். இங்கு அனுப்புங்கள் என்றால் யாரும் அனுப்ப மாட்டார்கள். ஆனால் கூகுளுக்கு அனுப்புவார்கள். எல்லோருக்குமே மேடையில் ஒளிவட்டத்தில் இருக்கவே ஆசை. இதில் தவறில்லை. அவர்கள் கோபுரத்தில் இருந்தால் எல்லோரும் பார்ப்பது எளிதே. அதைத்தான் இவ்வலைப்பூ செய்யப்போகிறது. அனுப்புவருக்கும் சிரமமில்லை. அவர்கள் பார்த்து, ரசித்த ஒரு வீடியோ கிளிப்பை எமக்கு 'html tag' ஆக அனுப்பினால் போதும். இந்த ஒட்டவைக்கும் திறன் கொண்டு நம் வீட்டு வீடியோ (புழக்கடை சினிமா - Garage Cinema) வையும் இங்கு வெளியிடலாம். ஒவ்வொருமுறை ஊருக்குப் போகும் போதும் வீடியோ எடுக்கிறோம், படமெடுக்கிறோம், சிலர் பாட்டுக்களை ரெகார்டு செய்வதுமுண்டு. அவைகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். இது professional-ஆக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. எவ்வளவு சின்ன சேதியாக இருந்தாலும் வெளிநாட்டில் வாழும் மாணவர்களுக்கும் பிறருக்கும் அது ஏதோவொருவகையில் பயன்படும்.

முன்னெப்போதுமில்லாத அளவில் தனிமனிதப் பதிவு என்பது உச்சத்தில் இருக்கிறது. இணையம் என்ற தொழில் நுட்பம் இதைச் சாத்தியப்படுதியுள்ளது. அதைப் பயன்படுத்தி தமிழ மரபுச் சுவடுகளை என்றும் நிலைத்திருக்கும் வண்ணம் மின்னுலகில் பதிவு செய்து வைக்கலாமே?

உங்களிடம் அதிகமாக ஒன்றும் கேட்கவில்லை. ஒரு மின்னஞ்சல். அவ்வளவுதான். அம்மின்னஞ்சலில் மேற்சொன்ன அத்தனை விஷயங்களையும் அனுப்பிவிடலாம்.
http://www.tamilheritage.org

1 comment:

 1. வலைப்பூ நல்ல வடிவா இருக்கு
  அருமையான தகவல்கள்.
  ஆமா மரபுவிக்கிய விட்டுட்டிங்களே :)

  நன்றி!
  என்றும்அன்புடன்
  செல்வ.முரளி

  ReplyDelete