Search This Blog

Thursday, July 22, 2010

தொடக்கப் பள்ளிக்கு தேவையான தமிழ்க் கணினி தேவைகள்

தொடக்கப் பள்ளிக்கு தேவையான தமிழ்க் கணினி தேவைகள்

கணினியையும் பள்ளி மாணவனையும் பிரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பாடத்திட்டத்திலோ அல்லது பிரத்யேகமாகவோ அல்லது கூடுதல் சிறப்பு பாடமாகவோ கணினி படிப்பு வளர்ச்சி பெற்றுள்ளது. அயல்நாடுகளில் கணினியைக்கொண்டே அனைத்து பாடங்களையும் கற்க வேண்டிய சூழல்உள்ளது. இவை மொழி சார்ந்த பாடங்களுக்கும் பொருந்தும். ஆனால் தமிழகத்தில் ஆசிரியர்களும், பள்ளி மாணவர்களும் பெரும்பாலும் கணினியை இயந்திரமாகவே கருதுகின்றனர். இந்நிலை மாறி ஆசிரியர்களும், பள்ளி மாணவர்களும் தமிழ்மொழி வளர்ச்சிக்கான கருவியாக கணினியை கருதவேண்டும். மேலும் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்க்கணினி ஆற்றல் அவசியம் தேவை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவனை தயார் செய்யும் ஆசிரியர் மற்றும் கல்வி மையமும் தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்க்கணினி அறிவு பெற்றிருந்தாலே மேலோங்கி இருக்க முடியும்.

விண்டோஸ் இயங்குதளம், எழுத்துரு, எழுத்துரு வகைகள், எழுத்துருக்களை பொறுத்தும் முறை, எழுத்துக்கள் உள்ளீட்டு முறை, எழுத்துக்கள் உள்ளீட்டு வகைகள், அதன் சிக்கல்கள் மற்றும் குறைபாடுகள் எழுத்துரு வாரியாக நாம் அறிந்திருக்க வேண்டும். தமிழ் உள்ளீட்டு விசைமுறைகளாகிய தமிழ் 99, தமிழ் தட்டச்சு, தமிழ் ஒலியியல், தமிழ் பொனடிக் மற்றும் பிற விசை முறைகளை நாம் கற்றிருந்தலே விரைந்து பாடத்திட்ட பணிகளை கையாள முடியும். ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி அளவிலேயே மாணவர்களுக்கு இவற்றை கற்றுக் கொடுத்தல் அவசியமாகும். மாணவர்களும் சுயமாக இது சார்ந்த பணிகளை தன்னந்தனியாக செய்ய துணிவுள்ளதா என ஆய்வுசெய்ய வேண்டும். இந்த தொழில்நுட்ப சார்ந்த வளர்ச்சிப்பணிகளையும் உடனுக்குடன் மேம்படுத்தி தன்னை வளர்த்துக்கொள்ளவேண்டும். பெரும்பாலான இடங்களில் தமிழ்சார் வன்பொருள் மற்றும் மென்பொருளை வாங்குவதற்கே தயக்கம் உள்ளது. அடிப்படை கட்டுமானமாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி மையம் எவ்வாறெல்லாம் மேம்பட்டுடன் இருக்க வேண்டுமென சிந்திக்கவேண்டும். தமிழில் விசைப்பலகைகள், சொற்செயலிகள் மற்றும் பல்வேறு மென்பொருட்கள் இருந்தாலும் வாங்கிப்பயன்படுத்துவதற்கு வெட்கமும், தயக்கமும் ஒரு காரணமாக உள்ளது. சுயமாக இவற்றை நாம் தவிர்த்து ஒவ்வொரு கல்வி மையமும் தமிழ் விசைப்பலகைகள், சொற்செயலிகள் மற்றும் பல்வேறு மென்பொருட்களை

பயன்படுத்த முன்வரவேண்டும். இவற்றின் மூலமாக நாம் கற்றல் தமிழ்க்கணினி பயன்பாட்டை சுலபமாக நாம் அறியமுடியும். நம் தமிழும் அறிவியல் மொழி தானே?

விக்கிபீடியாவின் பின்னணியாய் அமையும் கோட்பாடுகள், விக்கிபீடியாவின் வரலாறு, விக்கிபீடியா சமூகம் தொடர்பான அறிமுகம், கட்டற்ற திறந்த மூல இயக்கம், திறந்த புலமைச்சொத்து தொடர்பான அறிமுக விளக்கங்களும் அக்கோட்பாடுகள் விக்கிபீடியாவை எவ்வாறு உருவாக்க விழைந்தன. விக்கிபீடியா ஊடாக வெற்றியை நிரூபித்தன என்பனபோன்ற தகவல்கள் சிறுவயதிலேயே மாணவர்களுக்கு தெரியவேண்டும். அவ்வாறு போதிக்கப்பட்டால் தான் வருங்காலத்தில் தானும் விக்கிப்பீடியாவில் தமிழ்ப்பணியாற்ற ஆர்வம் பெருகும். தமிழ் வளர்க்கும் தமிழ் இணைய பல்கலைக்கழகம், அதன் தொகுப்புகள் மற்றும் டிஜிட்டல் டிலைப்ரரி ஆகியன இளம்வயதிலேயே மாணவர்கள் பயன்பெரும் வகையில் போதிக்கவேண்டும். தமிழ் இணைய ஆற்றல், மின்னஞ்சல் பயன்பாடு, தேடுப்பொறி பயன்பாடுகள், அனிமேஷன் வாயிலாக தமிழ்க்கணினி தயாரிப்பு, இணைய வாயிலான தேர்வு, தமிழ் மென்பொருட்கள் அறிவை வளர்த்தல் ஆகியவற்றை படிப்படியாக நாம் வளர்க்க வேண்டும்.

ஒரு மருத்துவரின் குறிப்பும், மருந்தும் பிறருக்கு புரியாததன் தன் காரணம் அவற்றிற்கான தமிழ் சொற்கள் இல்லாமையே ஆகும். தகவல் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை ஆயிரக்கணக்கில் தமிழ்மொழி சொற்கள் புழக்கத்தில் உள்ளது. குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே புழக்கத்திலுள்ள இச்சொற்கள் வெளிக்கொண்டு வரவேண்டும். பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு கலைச் சொற்களை பொருள்பட போதித்தால் நம் தமிழ்மொழி, மேலும் வளர்ச்சி பெறும். தொடக்கப்பள்ளி அளவிலேயே படத்துடன், பொருள்பட கணினி பயன்பாட்டை மாணவர்களுக்கு விளக்கி கற்பித்தால், மாணவ பருவத்திலேயே தமிழ் சொற்கள் ஆழமாக குழந்தைகள் மனதில் பதியும்.

ஆசிரியர்களும், பள்ளி மாணவர்களும் 2டி அனிமேஷன் அறிவை ஆழமாக பெறுதல் வேண்டும். 2டி அனிமேஷன் அறிவை தமிழுக்கு ஏற்றபடி பயன்படுத்துதல் வேண்டும். 2டி அனிமேஷன் அறிவை தமிழ் கற்பிக்கும் கருவி தயாரிக்கும் பணிக்கு ஏற்றபடி பயன்படுத்துதல் வேண்டும். 2டி அனிமேஷனில் கோரல்ட்ரா, போட்டோஷாப், பிளாஷ், டைரக்டர் ஆகிய மென்பொருட்களை கற்றிருத்தல் வேண்டும். இருபரிமாண உருவங்களை தயாரித்து தமிழ் கற்பித்தலுக்கு பயன்படுத்துதல் வேண்டும். தமிழ் உச்சரிப்புக்கும், பேச்சு தமிழுக்கும் கணினி மென்பொருட்களையும் அதன் கருவிகளையும் பயன்படுத்துதல் வேண்டும். 2டி அனிமேஷன் மூலம் பாடங்கள் தயாரிக்கும் அறிவை பெற்று வட்டாரச்சொற்களை வளர்க்கலாம். உதாரணத்திற்கு வீட்டை பெருக்கும் துடைப்பம் தமிழகத்தின் பல பகுதிகளில் வெவ்வேறு சொற்களாக அழைக்கப்படுகிறது. வாரியல், விளக்குமாறு, பெருக்குமாறு, தொடப்பம், வாருகோல் என பல வட்டாரச்சொற்களை நம் வசிக்கும் வட்டாரத்திற்கேற்ப பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை எளிமையாக்கலாம்.

தொடக்கப்பள்ளி மாணவர்கள் இங்கு குறிப்பிட்ட அனைத்து ஆற்றலையும் பெறமுடியுமா? சிறுபருவத்தில் அனைத்து சிறார்களும் தமிழ்க்கணினி அறிவை பெறமுடியும். தமிழ்க்கணினி அறிவை சிறுபருவத்தில் பெற்றால் தான் இளமைப்பருவத்தில் தமிழ்க்கணினி தயாரிப்பை பல கோணங்களில் நாட்டுக்காக படைக்கமுடியும். அயலக மென்பொருட்களுக்கு இணையாக, நாம் வடிவமைக்கும் முறை, கற்பிக்கும் முறை, இதன் பலன்கள் ஆகியன நம் தமிழ் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பாமரருக்கும் உறுதுணையாக இருக்கும்.



No comments:

Post a Comment