கணினியில் தமிழ் பயன்பாடு 1980 ஆம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகம் நூலக பயன்பாட்டிற்காக உருக்கியதாக வரலாறு கூறுகிறது. சுமார் 32 ஆண்டுகள் கணியியில் தமிழ் பயன்பாடு இருந்தும் பல குழப்பநிலைகளே உள்ளது. கணினித் தமிழுக்கென சீரான முறையோ, உலக அரங்கில் ஒருங்கிணைப்போ, கணித்தமிழ் வளர்ச்சி திட்டமோ, எம்என்சி நிறுவனங்களில் கூட்டுப்பணியோ இல்லை. ஒரு கணினியில் பயன்படுத்திய உரையை, பிற கணினியிலும் பார்க்க பொதுவான எழுத்துரு தேவைப்பட்டது. இன்றும் பதிப்பு மற்றும் அச்சுப்பணிக்கு தேவைப்படுகிறது. இணையத்தை அனைவரும் பார்வையிட எழுத்துருவை கண்டிப்பாக டவுண்லோட் செய்ய வேண்டிய நிலையுள்ளது. இக்கவலைகளை போக்குவதற்கே 'யுனிக்கோட் தமிழ்' பிறந்துள்ளது. வருங்காலத்தில் யுனிக்கோட் தமிழே நிலைக்கும். யுனிக்கோட் தமிழின் அருமை அறிந்தும்., இவற்றை சீர்படுத்த அரசு தவறுகிறது. தமிழக அரசை சுட்டிக்காட்டினால் இது தகவல் தகவல்தொழில்நுட்பத்துறையின் பொறுப்பேன நினைத்துவிடுகிறார்கள். இதில் தமிழ் வளர்ச்சித்துறையின் பங்கும் 50% உள்ளது. இவ்விரு துறைகளும் கூட்டாக தமிழுக்கு முயற்சி எடுக்காததாலேயே நாம் சீரழிவை சந்திக்க நேர்கிறது. எல்லோரும் ஆங்கில விசைமுறை சீராகவுள்ளதாக கருதுகிறோம். ஆங்கில கீபோட்டு 1878ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, அதுவும் சீரான நிலையை உலக அளவில் பெற்றிட 50 ஆண்டுகள் ஆகியுள்ளது. நாமும் இப்பிரச்னையை இந்நவீன காலத்தில் சீருடன் பெற்றிட யுனிக்கோட் தமிழை வலிமைப்படுத்த வேண்டும்.
யுனிக்கோட் என்றால் என்ன? யுனிக்கோட் என்பது உலக மொழிகள் அனைத்தின் எழுத்துகளையும், குறியீடுகளையும் ஒரே கணினி குறியீட்டு முறையில் (Font) இணைத்து வடிவமைக்கும் ஒரு தொழில்நுட்ப முறையாகும். யூனிக்கோட் முறைகளின் மூலம் ஜப்பான், சீனம், கொரியா போன்ற பல சிக்கலான வரிவடிவங்களை கொண்ட மொழிகளை கூட எளிதில் கணினியில் பயன்படுத்த முடிகிறது. நாம் யுனிகோட்டில் டைப் செய்த பைலை உலகின் எந்த கணிணியிலும், எந்த நாட்டிலிருந்து திறந்து பார்த்தாலும் படித்து அச்சடிக்க முடியும். நாம் பயன்படுத்தும் ஒரே கணினியில், ஒரே பக்கத்தில், ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, ஜப்பான், சீனம், கொரியா என அனைத்து மொழிகளையும் செலவின்றி பயன்படுத்தலாம். தொழில்நுட்பம் மூலமாக சார்ந்து, எந்த மொழி வளர்கிறதோ அந்த மொழியே அழியாமல் இருக்கும். தமிழை வளப்படுத்த யுனிகோட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நாம் யுனிகோட்டில் டைப் செய்த ஒரு தமிழ் பக்கத்தை (பைலை) அலுவலக கணினி, லேப்டாப் கணினி, அச்சு, பதிப்பகம், இணையம் மற்றும் செல்பேசி என அனைத்து தொழில்நுட்பத்திலும் சிக்கலின்றி பார்த்து படித்துக் கொள்ளலாம். யுனிக்கோட் எழுத்துருக்கள் அதிகளவில் இலவசமாகவும், குறைந்த விலைகளிலும் கிடைக்கின்றன. யுனிக்கோட்டினால் கணினி மற்றும் இயங்குதளங்களின் செயல்படும் வேகம் அதிகரிக்கின்றன. நாம் ஆயிரக்கணக்கான பக்கங்களை சில நொடிகளில் பிரிண்ட் எடுக்கலாம். எந்த கணியிலும் யுனிகோட் எழுத்துருவை பதிக்கவோ, டவுண்லோட் செய்யவேண்டிய அவசியமோ இல்லை.
தமிழக அரசு தமிழில் வர்த்தக எழுத்துருக்களை ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனியாக விலை கொடுத்து வாங்குகிறது. ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனியாக இன்ஸ்டால் செய்ய வேண்டும். ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி பதிவு எண்களை பாதுகாக்க வேண்டும். இணைய பயன்பாட்டிற்காக தனித்தனியாக டவுண்லோட் செய்ய வேண்டும். யுனிகோட் எழுத்துரு உலக மொழிக்கே பொதுவானதால் இச்சிக்கல்கள் இன்றி பயன்படுத்தலாம். ஆனால் இதை முழுமையாக இணைய விரும்பிகளே பயன்படுத்துகிறார்கள். அரசுப்பணியில் பயன்பாடு இன்றி அவல நிலையில் உள்ளது.
சமீபத்தில் அமெரிக்கா விசா பெறுதற்காக சென்னை அமெரிக்க தூதரகத்திற்கு சென்றிருந்தேன். அமெரிக்க தூதரகத்தில் விசாவிற்கு நேர்காணல் வைத்தே விசா தருவார்கள். இதை அமெரிக்கர்களே நடத்துகிறார்கள். நேர்காணலின் போது எதற்கு, ஏன் அமெரிக்க செல்கிறீர்கள் என கேட்டார்கள். அப்போது நான் அமெரிக்காவில் தமிழ் இணைய மாநாடு நடைபெறுகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழை வளர்க்க அமெரிக்காவில் மாநாடு நடைபெறுகிறது என்று கூறினேன். அமெரிக்காவில் எம்என்சி கம்பெனிகள் அதிகம் உள்ளதால் தமிழின் வளர்ச்சி விவாதங்களும், ஆராய்ச்சிகளும் தமிழகத்திற்கு உதவும் என்று கூறினேன். தமிழகத்தின் அனைத்து கணினிகளில் வேலை செய்யும் அனைத்து ஸாப்ட்வேர்களும் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்படுவதாக கூறினேன். புன்முறுவலுடன் தமிழகத்திற்கு பயனுள்ளதாக உள்ளதா? என்று கேட்டார், தலையாட்டினேன். உங்கள் பணி தமிழையும், எலெக்ட்ரானிக்ஸையும் இணைக்கிறதென கூறினார். சில நொடிகளில் அவர் புரிந்து கொண்டதை எண்ணி பெருமை அடைந்தேன். தமிழும், கணினியும் பல செயலாக்கங்களை வருங்காலத்தில் செய்யவுள்ளது. அவர் புரிந்து கொண்டதை தமிழக அரசின் தகவல்தொழில்நுட்பத்துறையும், தமிழ் வளர்ச்சித்துறையும் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. யுனிகோட் சம்பந்தமாக பிரச்னைகளை சந்தித்தால் தமிழக அரசு உடனடியாக பணிக்குழுவை உருவாக்கி பிரச்னைகளை சமாளிக்கிறது. ஆனால் நிரந்தரதீர்வை ஏற்படுத்தும் எண்ணம் தமிழக அரசிற்கு இல்லை. தற்போது அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டிலும் தமிழக அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளதது வருத்தத்தை அளித்தது. தகவல்தொழில்நுட்பத் துறையும், தமிழ் வளர்ச்சித்துறையும் இணைந்து இணைந்து தனி வாரியமோ அல்லது அரசு நிறுவனமோ துவக்கவேண்டும்.
யுனிகோட் கன்சார்ட்டியத்தில் தமிழக அரசு உறுப்பினராக வேண்டும். உறுப்பினராக இருந்தால் தானே பன்னாட்டு அறிஞர்களின் அறிவையும் நம் மொழிக்கு பெறமுடியும். நம் மொழி சார்ந்த பிரச்னைகளை நிவர்த்தி செய்ய முடியும். தமிழக அரசு 9.75 லட்சம் லேப்டாப்புகளை தேர்தல் அறிக்கைப்படி அளிக்கவுள்ளது. மாணவர்கள் பலன் பெறவுள்ள வரவேற்க வேண்டிய திட்டமாகும். இந்த லேப்டாப்களில் தமிழ் மென்பொருட்கள் அளிக்கப்படுகின்றன. லேப்டாப்பின் அடிப்படை ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை தமிழில் அளித்திட சிந்தனையில்லாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இதற்கான தொழில்நுட்பங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் உள்ளன.
லேப்டாப்பில் உள்ள கீ-க்களையே தமிழில் பொரித்து அளிக்கலாமே? லேப்டாப்பில் உள்ள கீ-க்கள் தமிழில் இருந்தால் குறைந்தபட்சம் 20% மாணவர்களாவது தமிழ் தட்டச்சு அறிவை பெறுவார்கள். லேப்டாப்பை டெண்டர் அடிப்படையில் விநியோகிக்கும் நிறுவனங்களை தமிழக அரசாணைப்படி ‘தமிழ்99’ விசைமுறைகளைப் பெற்ற விசைகளுடன் லேப்டாப்களை தயாரிக்க உத்தரவிடவேண்டும். பள்ளிக்கல்லூரி மாணவர்கள் சுலபமாக தமிழ் உள்ளீட்டை லேப்டாப் மூலமாக செய்வார்கள்.
ஆசிய அளவில் தமிழ்நாட்டில் தான் அதிக அளிவில் செல்போன்கள் தயாரிப்படுகின்றன. இந்த செல்போன்களையும் தமிழை கண்டிப்பாக பொரித்து தரப்படுத்தலாமே? தமிழ் விசைகளோடு தான் செல்போன்களை விற்கவேண்டுமென தரமுறையை உருவாக்கலாமே?
தமிழக அரசின் இணய தளங்கள் தமிழக கிராமப்புற மக்களுக்காக தான் இயங்குகின்றன. அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் அரசு சேவைகளையும், தேவைகளையும் பெறுவதற்கே இணையங்களை தமிழக அரசுத்துறைகள் நிறுவிவருகின்றன. இந்த இணையங்களை ஏன் தமிழில் நிறுவுவதில்லை என்பது தெரியவில்லை. தமிழக அரசின் அனைத்து இணையங்களும் தமிழில் மாற்றம் செய்யவெண்டும்.
தமிழ் இணையப்பல்கலைக்கழகம் தான், தமிழக அரசின் தமிழ்க்கணினி பணிகளை செய்வதாக கூறுகிறார்கள். அந்நிறுவனத்தின் தமிழ்க்கணினி பணி தோய்வு நிலையிலேயே உள்ளது. கல்விப்பணியைப்ணியை மட்டும் அந்நிறுவனத்திற்கு ஒதுக்கி தமிழக அரசின் தமிழ்க்கணினி பணிக்காக தனி வாரியமோ அல்லது அரசு நிறுவனமோ துவக்கவேண்டும்.
ஒரு தொழிற்சாலை துவக்கவேண்டுமென்றால், மாசுக்கட்டுப்பட்டு வாரியத்தில் தரச்சான்றிதழை பெறவெண்டும். அதே போல் தமிழகத்தில் தயாரிக்கப்படும் அனைத்து மின்னனுவியல் தயாரிப்புகளும் "தமிழ்சார் தரக்கட்டுப்பாட்டை" அளித்த பின்பே விற்பனைக்கு வரவேண்டும். மின்னனுவியல் தயாரிப்புகளுடன் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் பயனாளர் கையேடுகள் தமிழில் வெளியிட வலியுறுத்த வேண்டும். நம் மொழியோடு குறைந்த மக்கள் தொகையுள்ள மொழிகள் கூட தத்தம் நாடுகளில் இவ்விதிகளை கையாளுகின்றன.
தமிழ்க்கணினி பயன்பாடுகள் பள்ளி மற்றும் கல்லூரி பாட்த்திட்டத்தில் சேர்த்திடல் வேண்டும். பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்கு தமிழ்க்கணினி சேவைகளையும், கலைச்சொற்களையும் ஊட்டினால் சமுதாய மாற்றத்தை காணலாம். மேலும் பல அரசு திட்டங்கள் கிடப்பில் தான் உள்ளன. யுனிகோட் தமிழ் மற்றும் பல்வேறு மின்னனு தமிழ்ப்பணியாக்கங்களுக்கு மனுக்களும், கோரிக்கைகளும் எங்களைப்போன்ற தொழில்நுட்பவாதிகள் அளித்து கடும் களைப்பை தான் கண்டுள்ளோம். சிறப்பான நலப் பணிகளை செய்து வரும் புதிய தமிழகஅரசு தமிழ்ப்பற்றுடன் கணினித்தமிழ்ப் பணிக்களை முடுக்கவேண்டும் என்பதே எங்கள் ஆசையாகும். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் பல நாடுகள் தமிழக அரசின் தமிழ்க்கணினி மேம்பாட்டு பணிகளையும், அரசாணைகளையும் உற்று நோக்குகிறார்கள். தமிழ்க்கணினி வளர்ச்சிக்கு உலகநாடுகள் தமிழக அரசின் அரசாணையையே தத்தம் நாடுகளில் கையாளுகிறார்கள். தமிழக அரசும் தோய்வின்றி தமிழ்க்கணினி பணிக்கு நவீன திட்டப்பணிகளை செய்து உலக தமிழன் மனதில் இடம் பெறவேண்டும்.
http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=446053&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88