Search This Blog

Monday, May 28, 2012

அனிமேஷன் படிப்புகள் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் துவக்கம்


 செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி 1923 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியாக தென்தமிழ்நாட்டில் திறக்கப்பட்டது. இக்கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவு, சென்னையில் உள்ள சாஃப்ட்வியூ நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு அனிமேஷன் வகுப்புகளை தனி பிரிவாக நடத்தவுள்ளது.

சாஃப்ட்வியூ நிறுவனத் தலைவர் திரு. மா. ஆண்டோ பீட்டர் அவர்கள் செயின்ட் சேவியர்ஸ்- சாஃப்ட்வியூ அனிமேஷன் கல்வி ஒருங்கிணைப்பாளராவார். செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியின் அனிமேஷன் லேபில் அனிமேஷன், அச்சுப்பணி, இணையதளம் உருவாக்கம், மல்ட்டிமீடியா, ஈலேர்னிங் என்ற இணையவழி கல்வி உருவாக்கம், வீடியோ எடிட்டிங் பற்றிய பல வகையான பட்டய படிப்புகள் நடத்தப்படும். மாணவர்கள் தேவைக்கேற்ப பட்டய படிப்புகளை தேர்வு செய்து படிக்கலாம். இந்த பட்டிய படிப்பு மூலம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.





Sunday, May 27, 2012

தமிழ் அறிஞர்கள் நால்வருக்கு பாராட்டு விழா

கணித்தமிழ் சங்கம் தகவல் தொழிற்நுட்பத் துறையில் தமிழ் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கணித்தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கணினி சார்ந்த வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மென்பொருள் தயாரிப்பளார்கள் உறுப்பினராக உள்ளனர். தமிழக அரசு மற்றும் மத்திய அரசும் இந்திய மொழிகளுக்காக செய்திடும் தகவல்தொழில்நுட்ப மறுமலர்ச்சிக்கு பல்வேறு வகையான மேம்பாட்டுப்பணிகயையும் கணித்தமிழ்ச்சங்கம் செய்து வருகிறது. தமிழக அரசின் தமிழ்க்கணினி திட்டங்களுக்கு கணித்தமிழ்ச் சங்கம் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றுவது மட்டுமின்றி பல விழிப்புணர்வு பயிற்சிகளையும் நடத்தி வருகிறது. இணைய முகவரி: www.kanithamizh.in



கணித்தமிழ்ச்சங்கம் சார்பாக தமிழ்மொழி டாட் காம் துவக்க விழா சென்னை மைலாப்பூரில் லக்சணா அரங்கில் (26.05.2012) நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திரா பார்த்தசாரதி, திருப்பூர் கிருஷ்ணன், மா.ஆண்டோ பீட்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் தமிழ் தொண்டாற்றும் நால்வருக்கு கவுரவிப்பு செய்யப்பட்டது. திரு. க.ஜெயகிருஷ்ணன், திரு. வீரமணிபாரதிதாசன், திரு.சி.வெற்றிவேல் மற்றும் திரு. பத்ரிசேஷாத்திரி ஆகியோர் ஆவர்.

தமிழில் முதன் முதலாக வாசகர்களுக்காக கணினி இதழை வெளியிட்ட க.ஜெயகிருஷ்ணனுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அவரின் ‘தமிழ்க்கம்ப்யூட்டர்’ இதழ் 21 ஆண்டுகளாக வெளி வருகிறது. தமிழ் ஊடகப்பேரவை, கணித்தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ் பதிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இவர் உள்ளார்.

சென்ற நூற்றண்டின் தலைசிறந்த தமிழ் அறிஞர் பாரதிதாசனின் பேரன் வீரமணிபாரதிதாசனுக்கு கவுரவம் செய்யப்பட்டது. பாரதிதாசன் நாத்திகவாதி, ஆனால் இவரோ ஆன்மீகவாதி. உலககெங்கும் சென்று இவர் ஆன்மீக தமிழ்ச்சொற்பொழிவை ஆற்றி வருகிறார்.

பள்ளி ஆசிரியர் சி. வெற்றிவேலுக்கு ஒரு வரியில் திருக்குறள் எழுதியமைக்கு கவுரவம் செய்யப்பட்டது. இவர் 150க்கும் மேற்பட்ட திருக்குறள் உரை மற்றும் 5000க்கும் மேற்பட்ட தமிழ் இதழ்களை சேகரித்து வைத்துள்ளார். தற்போது தன் சொந்த இணையத்தை
 தொகுத்து வருகிறார்.

கிழக்கு பதிப்பகத்தின் நிர்வாகி பத்ரிசேஷாத்திரிக்கு கவுரவம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் பேராசிரியராக பணியாற்றிய இவர் அறிவியல், இலக்கியம், ஆன்மீகம், நாவல், பயோகிராபி, மருத்துவம், இசை, கலை மற்றும் எண்ணெற்ற தலைப்புகளில் நூல்கள் பதித்துள்ளார். இவருடைய என்.எச்.எம் ரைட்டர் என்ற தமிழ்மென்பொருள் பெரும் பயன்பாட்டில் உள்ளது.



Tuesday, May 22, 2012

ராஜீவ்காந்தி கொலைகுற்றவாளி பேரறிவாளன் சிறை குற்றவாளிகளில் +2 தேர்வில் முதலிடம்


சிறைகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 35 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தாண்டும் 100 சதவீதம் தேர்ச்சியை சிறைத்துறை தக்க வைத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன் 1,096 மதிப்பெண்கள் பெற்று சிறை மாணவர்களில் முதலிடத்தைப் பிடித்தார்.

தமிழக சிறைகளில் இருக்கும் கைதிகளில் புழல் மத்திய சிறையில் 9 பேர், வேலூர் மத்திய சிறையில் 8 பேர், மதுரை மத்திய சிறையில் 10 பேர், கோவை சிறையில் 8 பேர் உள்பட 35 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்கள் தேர்வு எழுத புழல் சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. பேரறிவாளனும், முருகனும் தூக்குத் தண்டனை கைதியாக இருப்பதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இவர்களுக்காக வேலூர் மத்திய சிறையில் ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

சிறையில் தேர்வு எழுதிய அனைவரும் வணிகப் பிரிவே படித்து வந்தனர். முதல் 3 இடங்கள்: இவர்களில், பேரறிவாளன் 1,096 மதிப்பெண்கள் பெற்று சிறை மாணவர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பேரறிவாளன் பெற்று மதிப்பெண்கள் பாடவாரியாக: (தமிழ்- 185, ஆங்கிலம்-169, வரலாறு-183, பொருளாதாரம்-182, வணிகவியல்-198, கணக்கு பதிவியல்-179.)

இவருக்கு அடுத்தப்படியாக மதுரை மத்திய சிறைக் கைதி சௌந்திரப்பாண்டியன் 1,080 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார். மூன்றாமிடத்தை புழல் மத்தியசிறைக் கைதி முனுசாமி (988) பிடித்துள்ளார். தேர்வில் வெற்றி பெற்ற கைதிகளுக்கு ஏ.டி.ஜி.பி. டோக்ரா வாழ்த்து தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கின் மற்றொரு தூக்குத் தண்டனைக் கைதியான முருகனும் தேர்ச்சி பெற்றுள்ளார். (அவர் தமிழ்-173, ஆங்கிலம்-165, வரலாறு-138, பொருளாதாரம்-150, வணிகவியல்-200, கணக்கு பதவியியல்-157 என மொத்தம் 983 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.) இதுவரையில் சிறைக் கைதிகள் யாரும் பெறாத மதிப்பெண்ணை பேரறிவாளன் பெற்றுள்ளதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.