Search This Blog

Saturday, November 26, 2011

தமிழை, தமிழனை நேசித்த ஒரே வடநாட்டுத் தலைவர்

அரசியலில் நேர்மையையும் நியாயத்தையும் கடைப்பிடிப்பவர் களுக்குச் சோதனைகள் அதிகமாகவே இருக்கும். வி.பி.சிங்கிற்கும் அப்படித்தான். ஆதரவளித்துவந்த பாரதிய ஜனதா கட்சி தரப்பிலிருந்து நெருக்கடிகள், துணைப்பிரதமர் தேவிலால், சந்திரசேகர், சுப்ரமணியசாமி போன்றவர்களும் வி.பி. சிங்கிற்கு நெருக்கடிகளை உண்டாக்குபவர்களாக இருந்தார்கள். எத்தனை குறுக்கீடுகள் ஏற்பட்டாலும் அவர் அது பற்றிக் கலங்காதவராகவே செயல்பட்டார். எது நியாயம் என நினைத்தாரே அதனைச் செயல்பLத்துவதில் உறுதியாகவே இருந்தார். உள்கட்சி நெUக்கடிகள் அதிகரித்துக் கொண்டிருந்த நேரத்தில் மண்டல் கமிஷன் அறிக்கை நடைமுறைப்படுத்துவேன் என்ற உறுதியை மேற்கொண்டார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரி அவர் நிகழ்த்திய உரையில் சமூக நீதியின் அவசியத்தை அழுத்தமாக வலியுறுத்தினார். அதனை வலியுறுத்திப் பேசும்போதெல்லாம் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகியோரது பெயர்களை உச்சரித்தார். தன் அரசைக் கவிழ்க்க முயற்சிப்பது ஏன் என்பதை விளக்கிப் பேசிய அவர், “மண்டல் பரிந்துரையை அமல்படுத்த முயன்றதுதான் எல்லாவற்றுக்குமே அடிப்படைக் காரணம். அதை நேரடியாக எதிர்க்க முடியாத சக்திகள் வேறு காரணங்களைக் காட்டி திரை மறைவிலிருந்து ஆட்சியைக் கவிழ்க்கச் செயல்பட்டனர்.” என்றார். “எனது கால்கள் உடைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அடைய வேண்டிய இலட்சியத்தை நான் அடைந்துவிட்டேன். மரியாதையோடு ஆட்சியை விட்டு நாங்கள் வெளியேறுகிறோம். அதற்காகப் பெருமைப்படுகிறோம். அரசியல் நாள்காட்டிகளில் கடைசி தேதி என்று எதுவும் கிடையாது” என்று உறுதியான குரலில் தெரிவித்துவிட்டு தோல்வியைத் துணிச்சலாக எதிர்கொண்டார். பிரதமர் பதவியைத் துறந்ததுமே தனக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும்படி தெரிவித்த கண்ணியமான மனிதர் வி.பி.சிங். அவரது அரசைக் கவிழ்ப்பதில் முக்கிய பங்காற்றியவர் சந்திரசேகர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எம்.பி.க்களை மட்டுமே தன்வசம் வைத்திருந்த அவரை காங்கிரஸ் கட்சி ஆதரித்ததால் சந்திரசேகரை பிரதமர் பொறுப்பேற்க அழைத்தார் அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன். தனது ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு சந்திரசேகர் பிரதமராகப் பதவியேற்றார் என்றபோதும் அது பற்றிய அரசியல் காழ்ப்புணர்வு ஏதுமின்றி சந்திரசேகரின் பதவியேற்பு விழாவில் தன் மனைவி சீதாசிங்குடன் கலந்து கொண்ட பண்பாளர் வி.பி.சிங். தமிழகத்தின் பல முக்கிய நகரங்களுக்கும் கலைஞருடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் வி.பி.சிங். மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்திய வெற்றிவீரராக அவரைப் பொதுமக்கள் திரண்டு வரவேற்றனர். எந்த ஊருக்குச் சென்றாலும் வழியெங்கும் கூட்டம் நிறைந்திருந்தது. அவரை வரவேற்று ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் தன் இனிஷியல் ஆங்கிலத்திலும் சிங் என்பது தமிழிலும் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்த வி.பி.சிங் காரில் பயணித்தபடியே அதை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதிப் பழகினார். தமிழ்மொழியும் தமிழர்களின் அன்பும் அவரைக் கவர்ந்தன. தன் கவிதைகள் தமிழில் வெளிவருவது பற்றிக் குறிப்பிட்டு எழுதியுள்ள வி.பி.சிங் “தமிழக மக்கள் என்மீது நிறைந்த பாசத்தைப் பொழிந்துள்ளனர். அவர்கள் எனக்குக் காட்டும் பாசவுணர்வுக்கு எந்தவொரு பொருளும் மாற்றுப் பரிசாக இருக்க முடியாது. ஆகையால் என்னுடைய ஆழ்ந்த உணர்வுகளை அவர்கள் முன்பு வைக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதோடு தனது தமிழாக்க கவிதை நூலிலிருந்து கிடைக்கும் வருமானத்தை திருச்சியிலுள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அளித்துவிடுமாறு தெரிவித்தார் வி.பி.சிங். பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் பல மாநிலங்களில் கலவரங்கள் வெடித்தன. இத்தகைய தொடர் வன்முறைகளால் இந்தியா மதவெறிக்காடாக மாற்றிவிடும் என அச்சம் கொண்டு சாகும்வரை ‘உண்ணாவிரதப் போராட்ட’த்தைத் தொடங்கினார். அவரை எதிர்த்து ‘உண்ணும்விரதம்’ இருந்தனர் மதவாதிகள். தனது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதால் தண்ணீர் கூடக் குடிப்பதை நிறுத்திவிட்டார் வி.பி.சிங். அதனால் சிறுநீரகம் வெளியேறுவது நின்றது. இதனால் அவரது இரண்டு சிறுநீரகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். வி.பி.சிங்கின் ஆட்சி யைப் பறித்த மதவாதம் அவரது சிறுநீரகங்களையும் பறித்துவிட்டது. வி.பி.சிங்கிற்கு சிறுநீரகக் கோளாறு என்றதும் துடித்துப் போயினர் தமிழக மக்கள். அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்காகத் தங்களின் சிறுநீரகத்தைத் தர முன்வந்தனர் ஒரத்தநாட்டைச் சேர்ந்த திராவிடர் கழக இளைஞர்கள். ஆனால் வி.பி.சிங் “வாழவேண்டிய இளைஞர்களின் சிறுநீரகத்தைப் பெற்று என் ஆயுளை நீட்டித்துக்கொள்ள விரும்பவில்லை. என்மீது அன்பு கொண்டு சிறுநீரகம் தர முன்வந்த இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சொன்னதுடன் “அடுத்த பிறவி என ஒன்றிருந்தால் நான் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன்” என்றார் இதயம் நெகிழ. 15 ஆண்டுகளாக அவரை வாட்டி வதைத்த நோய்கள் உச்சக்கட்டத்தை எட்டின. 2008 நவம்பர் 27ஆம் நாள் (இன்று) தனது (77 வயது) இறுதி மூச்சுவரை சமூகநீதியையும் மதச்சார்பின்மையையும் இறுகப் பற்றியிருந்த வி. பி. சிங்கின் உயிர் பிரிந்தது. அவர் கொள்கையும் எண்ணமும் வென்றது. (நன்றி-கவின்மீடியா)

1 comment:

 1. இந்த பதிவு மலரும் நினைவுகளாய் அல்ல தமிழ் மணக்கும் நினைவுகளாய் உள்ளது. தேசிய தலைவர்கள் பிற மாநில மக்களுடன் அன்பு பாராட்டி நட்புறவு பேணுவது அபூர்வமானது.
  இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.
  K.ராஜா
  www.tally9erp.blogspot.com
  ( தமிழில் மொபைல் மூலம் பதிவாகும் ஒரே வலைப்பதிவு ) எளிய தமிழில் டேலி மென்பொருள்.

  ReplyDelete